சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஏதேனும் அறக்கட்டளைகளில் அறங்காவலர்களாக இருக்கிறார்களா? என்ற விபரங்களைக் கேட்பதற்கான வழிவகைகளை கண்டறியுமாறு தேர்தல் கமிஷனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவில் தாங்கள் அறங்காவலர்களாக இருக்கும் அறக்கட்டளைகளின் விபரம் மற்றும் அந்த அறக்கட்டளைகளின் சொத்து மதிப்பு விபரங்களை குறிப்பிட வேண்டுமென்பதே உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்.

தான் தலைமை வகிக்கும் அறக்கட்டளையின் சொத்து விபரங்களை வெளியிடாத காரணத்தால், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வத்தின் செல்வத்தின் தேர்தல் வெற்றியை செல்லாத ஒன்றாக அறிவிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

கு.க.செல்வம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஒரு வேட்பாளர் தனது சொத்து விபரங்களை வெளியிடுவது தொடர்பாகத்தான் வேட்புமனுவில் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதே தவிர, அறக்கட்டளையில் இடம் வகிப்பது தொடர்பாக எதையும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார்.