சென்னை: சென்னையில் தேவையின்றி சாலையிலும், அதற்கான பாதையிலும் ஓடி ஆறு மற்றும் கடலில் கலக்கும் மழை நீரை, சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு விநியோகிக்கும் வழிமுறைகளை ஆராயும்படி தமிழக அரசு மற்றும் சென்னைப் பெருநகர நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னைப் பாடியில் வசிக்கும் சண்முகம் என்ற நபர் இதுதொடர்பாக தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கினார்கள்.

அந்தப் பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “மழைநீர் வடிகால் அமைப்புகள் அனைத்தும் கான்கிரீட் படிமத்தால் ரூ.1101.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைநீரை நிலம் உறிஞ்சுவது தடைசெய்யப்படுகிறது. இந்த மழை நீர் எந்தப் புண்ணியமும் இல்லாமல் கடலிலும், ஆறிலும் சென்று கலக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

‍இதனை விசாரித்த நீதிபதிகள், “இத்தகைய ஒரு செயல்திட்டம் இதுவரை அரசிடம் இல்லையென்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தேவையின்றி வீணாகும் மழைநீரை சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு விநியோகம் செய்யலாமே? எனவே, மாநில அரசும், சென்னைப் பெருநகர நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை வாரியமும் இதுதொடர்பான செயலாக்க ஆய்வில் ஈடுபட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.