விசாரணை குழு ஆய்வு அறிக்கை எதிரொலி: சசிகலா சாதாரண சிறைக்கு மாற்றம்!

--

பெங்களூரு,

ரப்பர அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டு சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறைத்துறை ஐஜியாக இருந்த ரூபாவின் புகாரை தொடர்ந்து, கர்நாடக அரசு அமைத்த உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கையை தொடர்ந்து, கர்நாடக அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை அறிக்கையில், சசிகலா சகல வசதிகளுடன் சிறையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கொடுத்து, சலுகைகளை அனுபவித்து வந்த தாக புகார் கூறப்பட்டது. சிறையில் சசிகலாவுக்கு தனி அறை, டிவி, பிரிட்ஜ், கட்டில் போன்ற  ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அவ்வப்போது சிறைக்கு வெளியே ஷாப்பிங் சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், வெளியில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்களும் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.

சசிகலா வைத்திருக்கும் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வெளியில் இருந்து மலர்களும் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா வெளியிட்ட  வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தண்டனை பெற்ற கைதி ஒருவர்  சிறையிலேயே சொகுசாக வாழ்ந்து வந்த காட்சிகள் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து  உயர்மட்ட குழு விசாரணை நடத்த  கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். அந்த விசாரணை குழு, சிறையில் விசாரணை செய்து, விசாரணை அறிக்கையை  கடந்த வாரம் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது.

இதையடுத்து கர்நாடக அரசு சிறைத்துறைக்கு கண்டிப்பான உத்தரவை வழங்கி உள்ளது. அதன்படி, தற்போது, சசிகலா, இளவரசி ஆகியோர் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர்.  அவருக்கு சமையல் செய்யும் வசதி மற்றும், வெளியில் இருந்து வரும்  உணவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சசிகலா தற்போது சிறை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல, சிறை வளாகத்தில் உள்ள  மருத்துவமனையிலேயே அவருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படு வதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை மாடர்ன் உடையில் வலம்  வந்துகொண்டிருக்கும் சசிகலாவுக்கு விரைவில் சிறை உடை வழங்கப்படும் என்றும் கூறபட்டுள்ளது.

விவிஐபி வசதிகளுடன் ஆடம்பரமாக சிறையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலா தற்போது, சாதாரண 8×10 அறைக்கு மாற்றப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

அதுபோல, அவரை சந்திக்க வருபவர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.