சென்னை:

திருப்பரங்குன்றத்தில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த விடுமுறைகால அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்ததுள்ளது.

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால், இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை என்றும், எனவே தேர்தலை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும், தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.