மெரினா போராட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை…..உயர்நீதிமன்றம்

சென்னை:

போராட்டத்தை ஒழுங்குபடுத்தவே அரசுக்கு உரிமை உள்ளது. கட்டுப்படுத்துவதற்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என சென்னை காவல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் பாதுகாப்பு அளிப்பது இயலாத என்றும் குறிப்பிட்டிருந்தது, இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில் “காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா?. போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு. கட்டுப்படுத்த இல்லை” என்றனர்

மேலும், அவர் கூறுகையில், ‘‘பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பண்டிகையை தடை செய்ய வேண்டும் என கோர முடியுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.