சசிகலா, டிடிவி நீக்கத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்!! எடப்பாடி அணிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை நீக்கியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தவுடன் பொதுக் குழு கூட்டம் நடந்தது. அதில் சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, இரு அணிகளும் இணைந்து விட்டது குறித்தும், பொதுச் செயலாளர் பதவி நியமனம் ரத்து செய்யப்பட்டது குறித்தும் புதிதாக தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இரட்டை இலை சின்னத்தை மீட்பது என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நவம்பர் 29-ம் தேதிக்குள் சசிகலா, தினகரன் நீக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.