மும்பை:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர் வருமானத்தையும், அதிகளவிலான சர்க்கரை நோயையும் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் தனி நபர் சம்பளம் உயர்வதால் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மனித உடல் இன்சுலின் அளவை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது திசுக்களை அழித்து உடல் உறுப்புகளை செயலழிக்க செய்கிறது. இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு வரையிலான 16 ஆண்டுகளில் சர்க்கரை நோய் வேகமாக வளர்ந்துள்ளது.

உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா 49 சதவீதத்தை கொண்டுள்ளது. 2017ம் ஆண்டில் 7.20 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 13.40 கோடியாக உயர்ந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது அதிக மக்கள் தொகை வளர்ச்சி கொண்ட ஒரு நாட்டின் பொது சுகாதாரத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் 50 கோடி மக்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கடந்த கால் நூற்றாண்டில் 2017ம் ஆண்டு ஆண்டு நவம்பர் வரை இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு 64 சதவீதம் உயர்ந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 1990ம் ஆண்டு இந்தியாவின் தனி நபர் வருமானம் ரூ.24,867 ஆக இருந்தது. இது 2016ம் ஆண்டில் ரூ.1,09,000 ஆக உயர்ந்துள்ளது என்று உலக வங்கி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதே காலக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 123 சதவீதம் அதிகரித்துள்ளது.

2015&16ம் ஆண்டில் தேசிய குடும்ப நல சர்வேயின் போது 2.9 சதவீத பெண்களும், 2.7 சதவீத பெண்களும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது இதற்கு முந்தைய சர்வேயை விட 3 மடங்கு அதிகரித்திருப்பதை காட்டுகிறது. அப்போது 0.8 சதவீத பெண்களும், 1.0 ஆண்களும் சர்க்கரை நோய் இருப்பதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் உயர உயர ஏற்பட்ட வாழ்க்கை தர மாற்றத்தினால் உணவு பழக்க வழக்கங்கள் மாறியது. இதனால் உடல் ஆரோக்கியம் சீரழிந்து சர்க்கரை நோய் அதிகரித்துவிட்டது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.