பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு மிக அதிக ஊதியத்தில் விமான ஓட்டிகள் தேர்வு

டில்லி

ர் இந்தியா நிறுவனம் மூத்த விமான ஓட்டிகளில் 40 பேரை பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கு மட்டும்  விமானம் ஓட்ட தேர்வு செய்துள்ளது.

பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய வி வி ஐ பிக்கள் தற்போது ஏர் இந்தியாவின் பி 747 ரக விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.   இதற்கு ஏர் இந்தியா ஒன் என்னும் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை முதல் இவர்களுக்கு இரு போயிங் 777 விமானம் அளிக்கப்பட உள்ளன.  இதற்கும் ஏர் இந்தியா ஒன் என்னும் குறியீடே வழங்கப்பட உள்ளது.

இந்த விமானங்கள் 19 கோடி டாலர் விலையில் வாங்கப்பட்டுள்ளன.  இவற்றில் பல பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த விமானங்களை ஓட்ட இந்திய விமானப்படை விமானிகள் தேர்வு செய்யப்பட இருந்தனர்.  தற்போது அந்த திட்டம் மாற்றப்பட்டு ஏர் இந்தியா தனது மூத்த விமானிகளில் இருந்து 40 பேரை இதற்காக தேர்வு செய்துள்ளது.

இந்த 40 பேரும் மிக முக்கிய பணியில் ஈடுபட உள்ளதால் அதற்கேற்ற வகையில் மிகவும் அதிகம் ஊதியம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.    அவர்கள் ஏர் இந்தியாவின் நிறுவன பட்டியலில் தொடர்வார்கள்.  ஆயினும் அவர்களுக்கு இந்த பணிக்காகச் சிறப்பு அலவன்சுகள் மற்றும் அதிகமான ஊதிய உயர்வு மற்றும் 70 மணி நேரம் கட்டாய ஓவர்டைமுக்கு அலவன்சுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இவர்கள் பறக்கும் நேரம் எவ்வளவாக இருந்தாலும் இவர்களுக்கு நிரந்தர அலவன்சாக மாதத்துக்கு 1200 டாலர்கள் வழங்கப்பட உள்ளது.க்  இதைத் தவிர மேலே குறிப்பிட்ட அலவன்சுகளும் வழக்கமான ஊதியமும் அளிக்கப்பட உள்ளது.   மொத்தத்தில்  இவர்களுக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் மற்றும் அலவன்சுகள் வழங்கப்பட உள்ளன.  நாட்டில் அதிக ஊதியம் பெறும் விமான ஓட்டிகள் இவர்களாக இருப்பார்கள்.