எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் புகார்: லஞ்சஒழிப்புத் துறைக்கு அவகாசம்

சென்னை:

முதல்வர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க செப்டம்பர் 12ம் தேதி வரை சென்னை உயர்நீதி மன்றம்  அவகாசம் வழங்கி உள்ளது.

ஏற்கனவே கடநத 4ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்வர் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதைத் தொடர்ந்து விசாரணைக்கு 7ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புதுறையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் வரும் 12ந்தேதி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழக முதல்வர்மீது ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறை யிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில், முதல் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளார்.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. பொது ஊழியரான எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடையும் நோக்கில் இதுபோன்று செயல்பட்டுள்ளார். எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும்  எடுக்க எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, முதல்வர் மீதான புகாரில் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் கடந்த 4ந்தேதியன்று  விசாரணையன்போது,  புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்,  விசாரணை குறித்த விரைவு அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் தந்துள்ளதாக டிஜிபி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேலும் அவகாசம் வழக்கி வழக்கை 12ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.