எடப்பாடி மீதான நெடுஞ்சாலை டெண்டர் புகார்: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரி கேள்வி

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

அதுகுறித்து விரிவான விவரங்களை வரும் 5ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதி மன்றம், புகார் குறித்து விரிவான  அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, . டெண்டர்களை ஆய்வு செய்ய குழு அமைத்தது எப்போது, குழுவில் உள்ளவர்கள் யார்? என்ற விவரங்களை வரும் 24-க்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 26ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

உலக வங்கித்திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை ஆட்சியாளர்கள் தங்களது உறவினர்களுக்கு ஒதுக்கக்கூடாது என்பது தெரியுமா?

முதல்வரின் உறவினர்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது குறித்து உலக வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டதா?

ஒப்பந்த ஒதுக்கீடு குறித்து சட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும், டெண்டர் தொடர்பாக அரசு மற்றும் உலக வங்கி ஒதுக்கிய நிதி விவரங்களை  வரும் 5-ம் தேதிக்குள் விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது