டெண்டர் முறைகேடு: எடப்பாடி மீதான சிபிஐ விசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம்

டில்லி:

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கை விசாத்த உச்சநீதி மன்றம்  சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து,  பதில் அளிக்க திமுகவை சேர்ந்த ஆர்.எஸ். பாரதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தமிழக முதல்வர்மீது ஊழல் புகார் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது சம்பந்தி பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோருக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நான்கு வழி மற்றும் ஆறு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.4,833.57 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கி உள்ளதாகவும், இதில்  மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீதும், தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார். இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது, டெண்டர் தொடர்பான ஆவனங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம்,  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக அறிவித்தது.

இந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு தடை கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி மீதான   நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான  புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதிப்பதாக கூறிய உச்சநீதி மன்றம், டெண்டரில் முறைகேடு என்றால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டியதை விடுத்து முதல்வருக்கு எதிராக ஏன் மனு தாக்கல் செய்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து வழக்கு தொடர்ந்த திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published.