மால்டா:
செபாவில் இருந்து புறப்பட்டு திரிபோலி நோக்கி 118 பேருடன் சென்ற லிபியா விமானம் கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும், விமானத்தை கடத்திய இருவர் சரணடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று லிபியாவின் செபாவில் இருந்து 118 பயணிகளுடன் திரிபோலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், பயணிகள் போல் விமானத்தில் வந்தவர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் விமானத்தைக் கொண்டு வந்தனர். விமான ஓட்டியை மிரட்டி விமானத்தை மால்டாவில் தரையிறங்கும்படி கட்டளையிட்டுள்ளனர். இதனையடுத்து, மிரண்டு போன விமானிகள் விமானத்தை மால்டா நோக்கி திருப்பினர்.
பின்னர், மால்டாவை நெருங்கியதும் விமான நிலைய அதிகாரிகளிடம் முறைப்படி விமான ஓட்டிகள் அறிவித்து அனுமதி பெற்று பின்னர் விமானத்தை தரையிறக்கினர். கடத்தப்பட்ட விமானத்தில் 82 ஆண்களும், ஒரு குழந்தை உள்பட 28 பெண்களும், 8 விமான பணியாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை 2 தீவிரவாதிகள் கடத்தியதாகவும் தகவல் வெளியாகியது. திடீரென நடந்த இந்த சம்பவத்தால் மால்டா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
தீவிரவாதிகளுடன் மால்டா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்கட்டமாக 65 பயணிகளை தீவிரவாதிகள் விடுவித்தனர். பின்னர் அனைத்து பயணிகளும் விடுத்துள்ளனர். மேலும் கடத்தல்காரர்கள் சரணடைந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும் மால்டா பிரதமர் ஜோசப் மஸ்காட் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த கடத்தலை தொடர்ந்து மால்டாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில விமானங்கள் இத்தாலியன் தீவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.