72 ஆண்டுகளுக்கு பின் மலைவாழ் கிராமங்களுக்கு மின்சாரம்: அரசுக்கு மக்கள் நன்றி

நெல்லை மலைவாழ் கிராம பகுதிகளில் சுமார் 72 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன்முறையாக மின்வசதி கிடைத்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு பகுதியில், சின்னமயிலாறு, காணிகுடியிருப்பு என இரு மலை கிராமங்கள் உள்ளன. இந்தியா சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாக இக்கிராமங்களில் மின்சார வசதி இல்லாமலேயே இருந்தது. இதனால் மலைவாழ் பகுதி மக்கள், மாலை 5 மணிக்கு மேல் வெளியில் செல்வதையே முற்றிலுமாக தவிற்த்தனர். தங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளில் எல்லாம் மின்சாரம் இருக்கும்போது, தங்கள் பகுதிக்கு மட்டும் மின்சாரம் இல்லாத நிலை தொடர்வதாக முதல்வருக்கு பல்வேறு கடிதங்களையும் அவர்கள் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், சின்னமயிலாறு, காணிகுடியிருப்பு பகுதிகளில் உள்ள 48 வீடுகளுக்கு நேற்று இரவு முதல் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 100 கிலோ வாட் மின்மாற்றி மூலம், 32 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.