தங்க தாகம் தணியாத இந்திய தடகள வீராங்கணை ஹிமா தாஸ்..!

பிரேக்: இந்தியாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை ஹிமா தாஸின் தங்க வேட்டை இன்னும் நின்றபாடில்லை. அவர், தொடர்ச்சியாக தனது ஐந்தாவது தங்கப் பதக்கத்தை வென்று, தடகள உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

இந்தியாவின் ‘டிங்க் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஹிமா தாஸ், 400 மீட்டர் தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தனது 5வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். செக் குடியரசில் நடைபெறும் நோவ் மேஸ்டோ நாட் மெடுஜி கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில்தான் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளர். இவருக்கு தற்போது 19 வயதாகிறது.

முதல் தங்கப் பதக்கம்

ஜுலை 2ம் தேதி, போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில், 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதல் தங்கத்தை வென்றார்.

இரண்டாவது தங்கப் பதக்கம்

ஜுலை 7ம் தேதி போலந்தில் நடந்த குட்னோ தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் 23.97 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2வது தங்கம் வென்றார்.

மூன்றாவது தங்கப் பதக்கம்

ஜுலை 13ம் தேதி, செக் குடியரசில் நடந்த கிளாட்னோ நினைவு தடகள 200 மீட்டர் ஓட்டப் போட்டியில், 23.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 3வது தங்கப் பதக்கம் வென்றார்.

நான்காவது தங்கப் பதக்கம்

ஜுலை 17ம் தேதி, செக் குடியரசில் நடைபெற்ற டபோர் தடகளப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டத்தில், பந்தய தூரத்தை 23.25 விநாடிகளில் கடந்து தனது 4வது தங்கத்தைக் கைப்பற்றினார்.

ஐந்தாவது தங்கப் பதக்கம்

ஜுலை 20ம் தேதி, செக் குடியரசில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், பந்தய தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தனது 5வது தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

ஆக, ஒரே மாதத்தில் இதுவரை மொத்தம் 5 தங்கங்களை அள்ளியுள்ளார் இந்த தங்க மங்கை ஹிமா தாஸ்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-