சிம்லா

ஹிமாசல பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை படு கேவலமாக தேர்தல் கூட்டத்தில் திட்டி உள்ளார்.

மக்களவை தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் பல தலைவர்கள் பொது மேடை என்பதைக் கூட கருத்தில் கொள்ளாமல் பல தகாத வார்த்தைகளை பேசி வருகின்றனர். இதனால் பொது மக்கள் அவ்வாறு பேசுபவர்கள் மீது மட்டுமின்றி அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் மீதும் கடும் கோபம் அடைகின்றனர்.

சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ஜெயப்ரதாவை காக்கி உள்ளாடை அணிந்துள்ளதாக பேசி உள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் அசாம் கானுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. பாஜகவினர் அசாம் கானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக வின் ஹிமாசல பிரதேச தலைவர் சத்பால் சிங் சமீபத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தில் சொல்ல நா கூசும் வார்த்தைகளால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திட்டி உள்ளார். இந்த கூட்டத்தின் வீடியோ செய்தி ஊடகத்தால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

 

அந்த கூட்டத்தில் சத்பால் சிங், “ராகுல் காந்தி காவலரே திருடன் ஆனார் என கூறி வருகிறார். சகோதரரே, உங்கள் தாய் ஜாமீனில் உள்ளார். நீங்கள் ஜாமீனில் உள்ளீர்கள். உங்கள் மைத்துனர் ஜாமீனில் உள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஜாமீனில் இல்லை. அவர் மீது எந்த வழக்கும் கிடையாது. அப்படி இருக்க ஒரு நீதிபதியைப் போல அவரை திருடன் என சொல்ல நீங்கள் யார்?

உங்களைப் பற்றி முகநூலில் ஒருவர் மிகவும் கேவலமாக எழுதி உள்ளார். நான் அதை இப்போது படிக்கிறேன் கேளுங்கள். நீங்கள் நாட்டின் காவலரை திருடன் என கூறினால் நீங்கள் ஒரு ******* என உங்களைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார்.” என பேசி உள்ளார்

சத்பால் சிங் கூறிய வார்த்தை பிரசுரிக்க இயலாத வார்த்தை ஆகும். ஒரு தாய் மற்றும் மகன் உறவை கேவலமாக சித்தரித்து தாயிடம் உறவு கொள்பவர் என்னும் பொருள் கொண்ட அந்த  சொல்லை கூச்சமின்றி வெகு சகஜமாக சத்பால் சிங் பொது மேடையில் கூறி உள்ளது மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது.