மும்பை: இந்தி நடிகர் ராஜ்கபூரின் ஆர்கே ஸ்டுடியோவை விற்க குடும்பத்தினர் முடிவு

மும்பை:

மும்பை செம்பூரில் உள்ள ராஜ்கபூர் கட்டிய ஆர்கே ஸ்டுடியோவை விற்பனை செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மும்பை செம்பூரில் புகழ்பெற்ற ஆர்கே ஸ்டுடியா உள்ளது. அந்த பகுதியின் அடையாளமாக விளங்கி கொண்டிருக்கும் இந்த ஸ்டுடியோ இந்தி நடிகர் ராஜ்கபூரால் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி இந்த ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. அதனால் இந்த ஸ்டுடியோவை நீண்ட நாட்கள் அப்படியே போட்டுவைக்க வேண்டாம் என ராஜ்கபூர் மனைவி கிருஜ்ணா ராஜ்கபூர், மகன்கள் ரந்தீர், ரிஷி, ராஜீவ், மகள்கள் ரிது நந்தா, ரிமா ஜெயின் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

அதனால் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோவை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். விற்பனை செய்யும் பணியை ஒரு குழுவிடம் ராஜ்கபூர் குடும்பத்தினர் ஒப்படைத்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கபூர் தனது 63வது வயதில் காலமானார். அப்போது முதல் அவரது குடும்பத்தினர் இந்த ஸ்டுடியோவை பராமரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.