சென்னை:

மித்ஷாவின் இந்தி தொடர்பான கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில்  வரும் 20ந்தேதி (நாளை) திமுக போராட்டம் அறிவித்திருந்த நிலையில், தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோகித்தை சந்தித்ததைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சர்வதேச அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாடு முழு வதற்கும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தி மொழியால்தான் இந்தியாவை இணைக்க முடியும் என்றும் கூறி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் அமித்ஷாவின் கருத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக போராட்டத்தை அறிவித்தது.

இந்தநிலையில், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று நேற்று மாலை ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். தொடர்ந்து பேசியவர்,  இன்று காலை (நேற்று)  கவர்னர் என்னை சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று நானும், டி.ஆர்.பாலுவும் கவர்னர் மாளிகைக்கு சென்றோம்.

இந்த சந்திப்பின்போது இந்திக்கு எதிராக நாளை நடத்தும் திமுக போராட்டம் குறித்து பேசப்பட்டது. நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்தோம். அப்போது கவர்னர்,  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

இதற்கு நாங்கள், “இதை மத்திய அரசு சொல்ல முன்வருமா?” என்று நாங்கள் அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், “நான் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கிறேன். எனவே மத்திய அரசு சொல்லித்தான் இதை நான் உங்களிடம் சொல்கிறேன்” என்ற உறுதியை எங்களிடம் தந்தார்.

அவர் சொன்ன அந்த கருத்தை மனதில் கொண்டு, 20-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், எந்த நிலையிலும் இந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழி நின்று என்றும் எதிர்ப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.