புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இந்தி திணிப்பு! விவசாயிகள் கடும் எதிர்ப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில்  இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அலவலக விளம்பர பதாதையில், புதுக்கோட்டை மாவட்டம் என்ற பெயர் இந்தியில் எழுதப்பட்டிருந்தது, விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அதை நிறைவேற்றுவது தொடர்பாக மாதம்தோறும், விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில்,  விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடைய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கப்படும்,. மேலும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்படும்  வேளாண்மை சம்பந்தமான பல்வேறு தகவல்களை விவசாயிகள் அறிய முடியும்.

அதன்படி, இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, ஆட்சியர் அலுவலகம் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயர் தமிழ் மற்றும் இந்தியில் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுவாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்படும் அறிவிப்பு பதாகையில், இன்று இந்தி இடம்பெற்றிருந்தது, கூட்டத்துக்கு வந்த விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படத்தியது. இதுதொடர்பாக, சில விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், குறைதீர்க்கும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மத்தியஅரசு மும்மொழிக்கொள்கையையும், இந்தி மொழியையும் கட்டாயப்படுத்தி திணித்து வரும் வேளையில், முதன்முதலாக புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில், புதுக்கோட்டை என்ற ஊரின் பெயர் இந்தியில் எழுதப்பட்டது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.