டில்லி:

ந்தி கட்டாயமில்லை என்றும், விருப்பம் இருந்தால் தேர்வு செய்து படித்துக்கொள்ளலாம் என்று, தேசிய கல்விக்கொள்கையில் திருத்தம் செய்து  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து மத்தியஅரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  வெளியிட்ட  தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில், மும்மொழிக் கொள்கையாக   மாநில மொழி உடன் ஆங்கிலம் மற்றும் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

மத்தியஅரசின் இந்த அறிவிப்பு இந்தி திணிப்பு என்று தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும் மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பு இல்லை என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டர் சமூக வலைதளத்தில்  #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலமானது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இந்தி திணிக்கப்படாது என பாஜக தலைவர்களும் தெரிவித்து வந்தனர்.

மேலும் நாடு முழுவதும் பல மாநிலங்களின்   மும்மொழி கொள்கைக்கு  எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில் திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலும் 3-வது மொழியாக இந்தியை கட்டாயமாக பயில வேண்டும் என்பது அவசியமில்லையாக்கும்.

தமிழகத்தில் எழுந்த பலத்த எதிர்ப்பின் எதிரொலியாக, மோடி, அரசு தனது கல்வி கொள்கையில் திருத்தம் செய்துள்ளது.