அபுதாபி:

இந்தி மொழியை மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஏராளமானோர் பேசக்கூடிய மொழியாக இருப்பதால் அதனை அங்கீகரிப்பதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தி மொழியை இந்தியர்கள் மட்டுமல்லாமல் பங்களாதேஷ் நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களும் அறிந்து வைத்திருப்பதால், இதனை அங்கீகரிக்க தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அபுதாபியில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணிபுரிந்தாலும் இந்தி மொழி பொதுவாக பலரால் பேசப்படுவதால் , தொழிலாளர் நீதிமன்றத்திற்கு வரும் புகார்கள் இந்தியிலேயே பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அரபு அல்லாத மக்கள் பேசும் பொது மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் ,சாதாரண தொழிலாளர்கள் எளிதாக பேசக் கூடிய மொழியாக இந்தி உள்ளது.

1950-ம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் எண்ணை அடிப்படையிலான பொருளாதாரம் உருவானபோது, உலகின் பல பகுதிகளிலிருந்து குறிப்பாக தெற்கு ஆசியாவில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்கள் உருது, மலையாளம் ,இந்தி சிங்களம், வங்காள மொழி பேசுபவர்களாக இருந்தனர். காலப்போக்கில் அவர்கள் உருது மற்றும் ஹிந்தி பேசுபவர்களாக மாறினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற உருது இந்தி ,மலையாளம், தமிழ் மற்றும் வங்காள மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

கத்தார் மற்றும் குவைத்தில் 7 மொழிகளில் தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. கத்தாரில் பல அரசு சேவைகள் இந்திய மொழிகளில் வழங்கப்படுகின்றன.

எத்தனை மொழிகள் இருந்தாலும் தற்போது அனைத்து தொழிலாளர்களும் பேசும் பொது மொழியாக இந்தி மொழி மாறியுள்ளது .