Random image

தெலுங்கு நடிகரை கைது செய்யக் கோரும் இந்து அமைப்புக்கள்

தராபாத்

தெலுங்கு திரையுலக நடிகரும் விமர்சகருமான மகேஷ் காதி ராமரைப் பற்றியும் சீதாவைப் பற்றியும் தவறாக பேசியதால் அவரை கைது செய்ய இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் காதி திரைப்பட விமர்சகரும் ஆவார்.   சமீபத்தில் இவர் ஒரு தெலுங்கு செய்தி சேனல் நடத்திய விவாத நிகழ்வில் கலந்துக் கொண்டார்.   பகுத்தறிவு வாதியான பாபு கோகினேனி கைதானதை குறித்து அந்த விவாத நிகழ்ச்சி நடந்துள்ளது.   அந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட மகேஷ் காதி கூறிய கருத்துக்கள் இந்து அமைப்புகளுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

அந்நிகழ்வில் மகேஷ், “என்னை பொறுத்தவரை ராமாயணம் என்பது வெறும் கதை தான்.  ராமர் மிகப் பெரிய மோசடிக்காரர் என அந்த கதையை படிக்கையில் எனக்கு தோன்றியது.    சீதா ராமருடன் திரும்பி வராமல் ராவணனுடன் வாழ்ந்திருந்தால் அவருக்கு நியாயம் கிடைத்திருக்கும்.    மேலும் அவ்வாறு வாழ்வதில்  என்ன தவறு உள்ளது?” என பேசி இருந்தார்.

அதை ஒட்டி அவர் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக அவர் மீது பஞ்சாரா ஹில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த புகாரை அளித்த பஜ்ரங் தள் தலைவர் ”இந்துக்களின் மனதை புண்படுத்தும் படி ஆட்சேபகரமான கருத்துக்களை மகேஷ் தெரிவித்துள்ளார்.   அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என புகாரில் தெரிவித்துள்ளர்.   மகேஷ் மிது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அத்துடன் சைதாபாத் காவல் நிலையத்தில் கருணாசாகர் என்னும் வழக்கறிஞர் மகேஷ் மீது புகார் அளித்துள்ளார்.   மகேஷ் பொதுமக்கள் கவனத்தைக் கவர இவ்வாறு இந்து மதத்தினரை புண்படுத்தும் படி பேசி உள்ளதாக செய்தியாளர்களிடம் கருணா சாகர் தெரிவித்துள்ளார்.   விவாதம் நடைபெற்ற தொலைக்காட்சி ஸ்டூடியோ பஞ்சாரா ஹில் பகுதியில் உள்ளதால் இந்த புகாரும் அதே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக மகேஷ் தனது முகநூல் பக்கத்தில், தன்னை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக தன் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.   இதற்கு கருணா சாகர் பலரும் இந்துக்களை கேவலமாக பேசி விட்டு அதை எதிப்போரை தலித்களுக்கு விரோதி என கூறுவது தற்பொதைய ஃபேஷன் ஆகி விட்டது என தெரிவித்துள்ளார்.