உ.பி.யில் தொடரும் பெயர் மாற்றம்: முசாபர் நகரை லட்சுமி நகர் என பெயர் மாற்ற இந்து அமைப்பு கோரிக்கை

லக்னோ:

உ.பி. மாநிலத்தில் அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என்று மாற்றப்படும் என முதல்வர் யோகி அறிவித்து, அதற்காக கேபினட் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது, முஷாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபலமான நகர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில், புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரை பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்படும் என யோகி அறிவித்து, அதற்காக கேபினட் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது முசாபர் நகரின் பெயரை லட்சுமி நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று பாஜக அமைப்பான பஜ்ரங்தள் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய, முசாபர்நகர் தொகுதி பாஜ எம்எல்ஏ கபில்தேவ் அகர்வால், முசாபர்நகரின் பெயரை லட்சுமி நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும்,  ஏற்கனவே முகலாய ஆட்சியின்போது, லட்சுமி நகர் என்ற பெயரை முசாபர் நகர் என்று மாற்றியதாகவும், மீண்டும் லட்சுமி நகர் என்றே மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

இதற்கான ஆவணங்கள் மற்றும் தேவையான குறிப்புகள் ஏற்கனவே முதல்வர் யோகியிடம் கொடுக்கப்பட்டு விட்டது என்றும்  கடந்த 1983ம் ஆண்டு விசுவ இந்த பரிஷத் நடத்திய யாகத்தின்போது இதுகுறித்து வலியுறுத்திப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போது இந்த பெயர் மாற்ற  பிரச்சினை பாஜகவின் அமைப்பான பஜ்ரங்தள்  தீவிரப்படுத்தி உள்ளது. இதுகுறித்து முசாபர் நகரில் பேனர்கள் வைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து கூறிய, பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் ஆங்கூர் ரானா, சுமார் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெயர் மாற்றப்பட்டது என்றும் தற்போது மீண்டும் பழைய பெயரையே வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக கூறினார்.

ஆனால்,  முசாபர்நகரில் உள்ள எஸ்டி கல்லூரி  வரலாறு துறைதலைவர் அஜய்பால் சிங் கூறும்போது, முசாபர் நகர் லட்சுமி நகர் என பெயரிடப்பட்டருந்தது குறித்து தனக்கு தெரியாது என கூறி நழுவி விட்டார்.