விநாயகர்  ஊர்வலம்: காவல்துறையினரை தாக்கிய இந்து முன்னணியினர்

சென்னை:

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கும் போது  நேற்று இந்து முன்னணி அமைப்பினருக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட தகராறில் முத்துகிருஷ்ணன் என்ற  தலைமை காவலரை மணிகண்ட பிரபு என்கிற இந்து முன்னணி நபர் கடுமையாக தாக்கினார்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து சென்னை முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் 2,696 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தி வந்தார்கள். சிலைகளுக்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

vi

இந்த நிலையில் நேற்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட நான்கு வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக வேன் மற்றும் மாட்டு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.  காவல் துறை அனுமதி வழங்கிய  இடங்களான பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை மற்றும் கார்போரண்டன் யூனிவர்சல் கம்பெனியின் பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் கரைக்கப்பட்டன.

இதையொட்டி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதே போல் ஊர்வலம் வரப்பட்ட பகுதிகளில் அதிகளவில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டனர்.  ஊர்வல பாதையில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்தனர்.

இதற்காக  சென்னை காவல்துறை ஆணையர்  அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊர்வலம் பாதையில் வந்த அனைத்து வாகனங்களின்  பதிவு எண்களை போலீசார் பதிவு செய்தனர். பிரச்னை ஏற்படும் பகுதிகளான திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஆயிரம் விளக்கு பகுதிகளில் கூடுதல் காவலர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்து முன்னணி அமைப்பினர், திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று இரவு ஐஸ் அவுஸ் மசூதி வழியாக விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். இதனால்  காவல்துறையினருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணியை சேர்ந்த மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தடையை  மீறி ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்றனர். இதையடுத்து அனைவரையும்  காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் முத்துகிருஷ்ணன் என்ற தலைமைக் காவலரை,  இந்து முன்னணியைச் சேர்ந்த பிரபு கடுமையாக தாக்கினார். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்து முன்னணி தரப்பில், “முன்னதாக போலீசார் மணிகண்ட பிரபுவின் தலையில் கட்டையால் அடித்ததால் அவர் காயம் அடைந்தார்” என்று தெரிவித்தனர்.

இந்த சூழலில்  இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு, காவல்துறையினரின் முயற்சியால், இந்து முன்னணி உட்பட பிற இந்து இயக்கத்தினரும் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டுச் சென்றனர்.

கார்ட்டூன் கேலரி