சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே  இந்துமுன்னணி தலைவர், காடேஸ்வரா சுப்பிர மணியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால், தற்போது அரசின் உத்தரவை மீறி தமிழகத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமான விநாயகர் சிலையை வைக்கப்படுவதாக கூறி வருகிறது.  இது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதுடன், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இந்து முன்னணியின் திடீர் மாற்றத்திற்கு காரணம், பாரதிய ஜனதா கட்சியே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வரும் 22ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வழக்கமாக நடைபெறும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படுவதும்,  ஊர்வலம் நடத்தவும் தடை விதித்துள்ளது.

ஆனால், தடையை விலக்கக்கோரி  பாஜக தலைவர் உள்பட இந்து அமைப்பினர் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தும், தமிழக அரசு பிடிவாதமாக தடையை விலக்க முடியாது என்று அறிவித்து உள்ளது. நீதிமன்றமும் தடையை விலக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

அதேவேளையில், தமிழகத்தில் மாநில அரசு, டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க  அனுமதி வழங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடைவிதிப்பது ஏன்? இந்து அமைப்பினர் கேள்வி விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில், தடை மீறி  1லட்சத்து 50ஆயிரம் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று காடேஸ்வரா சுப்பிர மணியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், திருவல்லிக்கேணி பகுதியில், விநாயகர் சிலை அமைக்கும் வகையில்,  பந்தக்கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனால் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இந்து முன்னணி தலைவரின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான்,  பாஜக தலைவர் எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு, தமிழகத்தில் வன்முறை வெறியாட்டத்தை நடத்த, இந்து அமைப்புகளின் பின்னணியில் பாஜக  செயல்பட்டு வருவது உறுதியாகி உள்ளது.

எச். ராஜாவின்  டிவிட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு போராட்ட காலமாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. எதையும் எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியையும், பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்துமுன்னணியின் திடீர் மனமாற்றம், எச்.ராஜாவின் டிவிட் போன்றவற்றை பார்க்கும்போது, விநாயகர் சதுர்த்தியன்று தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயல்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை திமுக, அதிமுக முதுகில் சவாரி செய்து, தேர்தலை சந்தித்து வந்த பாரதிய ஜனதா கட்சி, இதுவரை  காலூன்ற முடியாத நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு,  மாற்று கட்சியினருக்கும், பிரபல ரவுடிகளுக்கும் வலைவீசி,  தனது கட்சியில் இணைத்து வருகிறது.

மேலும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள், புதிய கல்விக்கொள்கை, நீட் விவரம், 50சதவிகித இடஒதுக்கீடு, இஐஏ2020 போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் தனது பலத்தை காட்ட முயற்சிக்கும் பாஜக தலைமை, விநாயகர் சதுர்த்தி அன்று, இந்துமுன்னணி உள்பட இந்து அமைப்புகளின் உதவியைக்கொண்டு வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி, தமிழகஅரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி, மாநில சட்டமன்றத்தை முடக்க திட்டமிட்டு உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை முடக்கி, கட்சியை உடைத்து, இரட்டை இலையை முடக்கி, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வந்து, மாநிலத்தில் அவர்மூலம் பாஜக மறைமுகமாக ஆட்சி செய்ய முயற்சிப்பதாக  தகவல்கள் பரவி வருகின்றன.

இதை உறுதிப்படுத்தும் வகையில்தான், பாஜகவின் அறிவுறுத்தலின் பேரில், இந்து முன்னணி தலைவரின் நடவடிக்கைகள் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது.

பாரதியஜனதா கட்சி மற்றும், இந்துமுன்னணி, இந்துஅமைப்புகளின் நடவடிக்கையை தமிழக காவல்துறை உடனே கவனத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில், ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.