நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா?:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து

க்கீரன் கோபால் மீதான வழக்கில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தனது கருத்துக்களை நீதிமன்றத்தில் வைத்தார்.

சில ஊடகங்களில் ராம் வாதாடியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சி நெறியாளரும், நக்கீரன் கோபாலிடம், “வழக்கு தொடுத்தவர் அல்லது குற்றச்சாட்டுக்கு ஆளானவரோ அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்பது சட்டம். தொடர்பே இல்லாத என்.ராம் நீதிமன்றத்தில் வாதாடலாமா. அவர் வழக்கறிஞரும் இல்லையே” என்று கேட்டார்.

இது குறித்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களிடம் கேட்டோம்.

சந்துரு

இதோ அவரது விளக்கம்:

“நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒருவர் அவர்களிடையே புகுந்து பேச ஆரம்பித்தால் ”சம்மன் இல்லாமல் ஆஜராகிராயே” என்று கூறுவதுண்டு. நீதிமன்ற வழக்கில் யாரையேனும் விசாரிக்க வேண்டுமென்றால் அதற்காக உரிய அறிவிக்கை (ஆங்கிலத்தில் – சம்மன்) சார்வு செய்து வரவழைப்பார்கள்.

இதைத்தான் மனோகரா திரைப்படத்தில் சிவாஜியை மன்னர் ”நீ ஏன் அழைத்துவரப்பட்டிருக்கிறாய் என்று தெரியுமா?” என்ற கேள்விக்கு சிவாஜியின் பதில் இதுவாக இருந்தது. ” நான் அழைத்துவரப்படவில்லை. இழுத்துவரப்பட்டிருக்கிறேன்”. இந்த வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நீதிமன்ற அழைப்பாணைக்குப் பிறகும் மன்றத்தில் வருகை தரவில்லையென்றால் சாட்சிகளையோ, வழக்காடிகளையோ கட்டாயமாக வரவழைப்பதற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடிகளையும், அவர்கள் தரப்பு சாட்சிகளையும் மூன்றாம் தரப்பு சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னரும் நீதிமன்றம் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் நீதிமன்றத்தின் முன்னால் வருகை தர உத்திரவிடலாம். அதேபோல் துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை நேரில் வரவழைத்து கோரி பெறலாம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமன்றங்களிலும் உறுப்பினரில்லாத எவரும் நுழைந்து பேச முடியாது. இதற்கு விதிவிலக்காக நாடாளுமன்ற அவைகளில் அட்டர்னி ஜெனரலையும், சட்டமன்றங்களில் மாநில அட்வகேட் ஜெனரலையும் வரவழைத்து கருத்து கேட்கலாம்.

நக்கீரன் கோபாலை விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க காவலர்கள் அல்லிக்குளம் குற்றவியல் நடுவர்மன்ற நடுவரை அணுகியபோது அந்த செய்தியைக் கேட்டறிந்த இந்து குழும தலைவர் திரு.என்.ராம் அங்கு நேரில் சென்றார். கோபால் மீது 124 பிரிவின் (இந்திய தண்டனைச் சட்டம்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்ட போது திரு.என்.ராம் தாமாகவே முன்வந்து தனது கருத்தை கேட்குமாறு கோரிக்கை விடுத்தார். திரு.என்.ராம் அவர்களின் பத்திரிகை பின்புலத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட குற்றவியல் நடுவர் அவரது கருத்தை கேட்டுக்கொண்டார்.

இவ்வழக்கில் பிரிவு 124 (இந்திய தண்டனைச் சட்டம்) பொருந்தாது என்றும் அப்படி பதிவு செய்தால் அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்குமென்றும் தனது கருத்தைக் கூறினார். இப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்தை கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. ஒரு நீதிபதி எல்லா துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே தனது சந்தேகங்களை நீதிமன்றத்தின் முன்னுள்ள எவரையேனும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், இல்லையெனில் அப்படிப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்துத் தெரிந்து கொள்வதிலும் தவறேதுமில்லை.

நக்கீரன் கோபால்

நான் ஆஜராக வேண்டிய வழக்காக இல்லாவிட்டாலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் எனது கருத்தை பல சந்தர்ப்பங்களில் கேட்டறிந்ததுண்டு. திரு.என்.ராம் பத்திரிகை துறையில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் தென்னிந்தியாவில் மிக முக்கியமான பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்ற முறையிலும் அவரது விருப்பத்தின் பேரில் குற்றவியல் நடுவர் கேட்டறிந்ததில் தவறேதுமில்லை. இதேபோல் நீதிமன்றங்கள் பல முறை நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளது.

வழக்காடிகள் உரிய வழக்கறிஞரை அமர்த்த இயலாத போதும் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றாத் தரப்பினராக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலும் சிக்கலான சட்டப்பிரச்சினைகள் எழக்கூடிய வழக்குகளிலும் நீதிமன்றமே ”அமிகஸ் க்யூரி” (நீதிமன்றத்தின் நண்பர்) என்ற முறையில் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்திற்கு உதவி செய்ய கேட்டுக் கொள்வதுண்டு.

என்.ராம்

மும்பை தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற குற்றவாளிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கை நடத்துவதற்கு வழக்குரைஞர்கள் எவரும் முன்வராதபோது உச்சநீதிமன்றமே திரு.ராஜு ராமச்சந்திரன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடும்படி கேட்டுக் கொண்டது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு வசதியில்லையென்றாலும் அவரது வழக்கை வாதாடுவதற்கு அவரது தரப்பில் இலவசமாக வழக்குரைஞரை அமைத்துக் கொடுப்பது நீதிமன்றத்தின் கடமை.

மற்றபடி நக்கீரன் கோபால் மீதான வழக்கைப் பொறுத்தவரை இந்து என்.ராம் வாதாடவில்லை. துறைசார் அறிஞர் என்ற முறையில் அவரது கருத்தை நீதிமன்றம் கேட்டது.  அது மிகச் சரியே. அதே நேரம் அவர் வாதாடினார் என்று குறிப்பிடுவது சரியல்ல” என்று விரிவாகச் சொல்லி முடித்தார் சந்துரு.

– டி.வி.எஸ்.சோமு

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: hindu n.ram in nakeern gopal case.. is it correct? : Judge K. chandru retirement) opinion, நக்கீரன் கோபால் வழக்கில் என்.ராம்: சரிதானா?:: நீதிபதி கே.சந்துரு (ஓய்வு) கருத்து
-=-