பாகிஸ்தான் வாழ்க எனக்  கோஷமிட்ட மாணவியைச் சுட்டுக் கொல்வோம் : இந்து அமைப்பினர் மிரட்டல்

ஹொசபேட், கர்நாடகா

பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்ட மாணவி அமுல் யாவை ஜாமீனில் வெளியே அனுப்பினால் சுட்டுக் கொல்வோம் என இந்து அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.

நாடெங்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.   அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஐமிம் கட்சித் தலைவர் ஓவைசி தலைமையில் நடந்த போராட்டத்தில் அமுல்யா என்னும் மாணவி பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்டார்.  அதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதைப் போல் நேற்று முன் தினம் கர்நாடக மாணவி ஆராத்ரா என்பவர் காஷ்மீர் விடுதலை பதாகையைக் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏந்தி வந்தார்.  அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த போராட்டக்காரர்களைக் கண்டித்து நேற்று பெல்லாரி மாவட்டம் ஹொசபேட் பகுதியில் இந்து அமைப்பான ஸ்ரீராம சேனா போராட்டம் நடத்தியது.

இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான சஞ்சீவமரடி, “பெங்களூருவில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் மாணவி அமுல்யா பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவரைப் போல் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது.   அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் இருவரையும் சுட்டுக கொல்வோம்.  அவர்களைச் சுடுவோருக்கு ரூ. 10 லட்சம் பரிசளிப்போம்” எனப் பேசி உள்ளார்.

பொது மேடையில் பெண்களுக்கு இந்து அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது கர்நாடக மாநிலத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.