உடுப்பி:

கர்நாடகா கோயில் அன்னதான கூடத்திலிருந்து பிராமணர் அல்லாதவர் என்று கூறி, உதவி பேராசிரியை ஒருவரை வெளியேற்றிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.


மணிப்பாலை சேர்ந்தவர் வனிதா ஷெட்டி. இவர் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிருஷ்ணா மடத்துக்கு வந்த அவர், அங்கிருந்த கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்றார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்தியவர்கள், தரைதளத்தில் பிராமணர்கள் மட்டுமே சாப்பிட முடியும் என்றும், பிராமணர் அல்லாதோர் மேல் தளத்துக்கு செல்லுமாறும் திருப்பி அனுப்பினர்.

அங்கு உணவு சாப்பிடாமலேயே அவர் திரும்பினார்.
இந்த தகவல் வெளியானதும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பக்தையான உதவிப் பேராசிரியையை பாரபட்சமாக நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்தனர்.

இது குறித்த கர்நாடக கோமு சவுதார்தா வேதிகா சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர் கூறும்போது, பிராமணர்கள் மற்றும் மற்ற சாதியினர் என பாரபட்சம் காட்டும் நடவடிக்கைக்கு அரசு தடை விதிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.
எனினும், உணவு உண்ணும் இடத்தில் பாரபட்சம் காட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுப்பி மடத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் ராவ் கூறும்போது, இது குறித்து மடாதிபதி ஸ்ரீ வித்யவல்லப தீர்த்த ஸ்வாமிஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற 7 மடாதிபதிகளுடன் கலந்து பேசிய பிறகு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.