கர்நாடகா: இந்து பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்….ஆளுநரிடம் மனு
பெங்களூரு:
இந்து பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யக்கோரி கர்நாடகா ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டது.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. அவருடைய நினைவு நாளையொட்டி கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு மவுரியா சர்க்கிளில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அந்த அறக்கட்டளை சார்பில் கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு கோரிக்கை மனு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த மனுவில், ‘‘மூத்த பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணை குழு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த நபர் உள்பட பலரை கைது செய்து உள்ளன. இவர்கள் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் சனதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்புகளால் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுள்ளனர். இவர்கள் தான் முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கலபுரகி ஆகியோரையும் படுகொலை செய்துள்ளனர். இந்த அமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருங்காலத்தில் மேலும் படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
எனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் அமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். அத்துடன், அமைதி காப்பது, சகிப்புத்தன்மை, மரியாதை, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பு ஆகியவை பற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.