இஸ்லாமியப் பகுதியின் கதாநாயகரான இந்து வாலிபர்

டில்லி

டில்லி கலவரத்தில் எரிக்கப்பட்ட மசூதியில் ஏற்றப்பட்டிருந்த காவிக்கொடியை ஒரு இந்து வாலிபர் நீக்கி பலராலும் புகழப்பட்டுள்ளார்.

டில்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் வன்முறை நிகழ்ந்தது.   இந்த கலவரத்தில் 4 மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.   கலவரத்தில் சுமார் 40 பேருக்கும் மேல் உயிர் இழந்தனர்.  தற்போது நகரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்த கலவரத்தில் வடகிழக்கு டில்லியில் உள்ள ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டு அந்த மசூதி கோபுரத்தில் காவிக் கொடி ஏற்றப்பட்டது.   அத்துடன் அங்கு அனுமார் சிலை வைக்கப்பட்டது.  இந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலாகியது.  தற்போது அமைதி திரும்பும் நிலையில் அந்த மசூதியின் இஸ்லாமிய மத குரு அந்த கொடியை அகற்ற விரும்பினார்.

அந்த மசூதி இருக்கும் பகுதியில் வசித்த ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர் ரவி பரஷார் என்பவர் இந்த சம்பவத்தால் மிகவும் மனம் பாதிக்கப்பட்டிருந்தார்.  அந்த மசூதியின் மத குரு  அங்கிருந்த இந்துக்களிடம் மசூதியில் உள்ள காவிக் கொடி மற்றும் அனுமார் சிலையை அகற்றும் படி மிகவும் கெஞ்சி கேடுக் கொண்டுள்ளார்.

பரஷார் தாம் அதற்கு உதவி செய்து காவிக் கொடியை அகற்ற மத குருவுடன் வருவதாகத் தெரிவித்தார்.     அது மட்டுமின்றி தானே மசூதியின் கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்த காவிக் கொடி மற்றும் அனுமார் சிலைகளை எடுத்து அகற்றி உள்ளார்.  இது அந்தப் பகுதி மக்களிடையே பரஷாருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.   அந்தப் பகுதியின் கதாநாயகன் என அவர் புகழப்படுகிறார்.