லக்னோ:
உ.பி. தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பாஜ வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறது. ஆனால், அக்கட்சிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது.

நல்ல கூட்டணி அமையவில்லை. 150 தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே வலுவான கூட்டணி அமைந்துவிட்டது. வேட்பாளர்களுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இப்படி ஈடுகொடுக்க முடியாத சிக்கிலில் பாஜ சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் அக்கட்சியின் கோராக்ப்பூர் எம்.பி.யும், இந்து யுவ வாகினி அமைப்பின் நிறுவனருமான ஆதித்யானந்த்வின் அமைப்பு தனியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உ.பி. தேர்தலில் பாஜ.வின் நட்சத்திர பேச்சாளராக கருதப்பட்டு வந்தவர் ஆதித்யானந்த். இவருக்கு ஆதரவு அதிகம் இருக்கும் குஷின்நகர், மகாரான்கஞ் மாவட்டங்களில் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கிழக்கு உ.பி.யில் 64 தொகுதிகளில் போட்டியிட இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

எங்களது நிறுவனர் ஆதித்யானந்த்தாவை பாஜ இரண்டு முறை அவமதித்துள்ளது. ஆதித்யானந்த்தாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜ நிராகரித்துள்ளது. அவரது பெயரை தேர்தல் நிர்வாக குழுவில் சேர்க்கவில்லை என்று அந்த அமைப்பில் மாநில தலைவர் சுனில் சிங் தெரிவித்துள்ளார்.

ஆதித்யானந்த்ஜி 10 பேர் கொண்ட பட்டியலை வேட்பாளருக்கு பரிந்துரை செய்தார். அதில் 2 பேருக்கு மட்டுமே பாஜ சீட் வழங்கியுள்ளது. இதை எங்களால் ஏற்க முடியவில்லை. அதனால் தனியாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு நடந்த பரிவர்தன் யாத்திரையின் போது ஆதித்யானந்த் புறக்கணித்தனர். இதற்கான பேனர் மற்றும் போஸ்டரில் இவரது படம் இடம்பெறவில்லை. ராஜ்நாத் சிங், கேசவ் பிரசாத் மவுரியா, உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேட்பாளர் பட்டியில் வெளியிடுவதற்கு ஆதித்யானந்த் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேட்டதற்கு.. ஆதித்யானந்த்வுக்கு பாஜ மாயாஜாலம் செய்துள்ளது. ஆனால், எங்களுக்கு பல மாவட்டங்களில் அமைப்பு உள்ளது. இதன் உறுப்பினர்கள் பாஜ.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். பாஜ அல்லாத வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம் என்றனர்.