ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க ஒன்று சேரும் 4 தொழில் நிறுவனங்கள்

டில்லி

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க எதிஹாட், இந்துஜா மற்றும் அடிக்ரோ ஆகிய நிறுவனங்கள் நரேஷ் கோயல் உடன் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்திய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் சுமை காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நிதி பற்றாக்குறையால் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை, கடன்களுக்கான வட்டி ஆகியவைகளும் செலுத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நாளுக்கு நாள் நிர்வாக செலவு அதிகரித்ததால் நிறுவன சேவைகள் குறைக்கப்பட்டன. தற்போது நிறுவனம் தனது அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ள்து.

இந்த நிறுவனம் அதிக அளவில் பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து கடன் வாங்கி உள்ளது. அந்த வங்கியின் தலைமையில் கடன் அளித்தோர் இந்த நிறுவனத்திடம் இருந்து கடனை திரும்பிப் பெற முயற்சி செய்து வருகின்றனர். அதை ஒட்டி சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று நிறுவனத்தை புதிய நிர்வாகத்தின் கீழ் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்துஜா குழுமம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏற்று நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று அறிவித்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு தாரரான அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் லண்டனை சேர்ந்த அடிக்ரோ நிறுவனம் ஆகியவை இந்த முயற்சியில் இந்துஜா குழுமத்துடன் இணைய உள்ளன. இந்த பணிக்கு உதவ ஜெட் ஏர்வேஸ் நிறுவன முன்னால் இயக்குனர் நரேஷ் கோயலும் இணைய உள்ளார்.