ராமர்கோவில் விவகாரம்: இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டால்…. பாஜ அமைச்சர் கிரிராஜ் சிங் மிரட்டல்

டில்லி:

யோத்தியில் ராமர் கோவில் தொடர்பான அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங், இந்துக்கள் பொறுமையுடன் ஓடி வருகிறார்கள்.. அவர்கள் பொறுமை இழந்துவிட்டால் நடப்பதை கண்டு பயப்படுகிறேன்…  என்று மிரட்டும் வகையில் பேசி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய  இடம்  யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கில்,  தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பட்டியலிட உத்தரவிட்டு ஒத்தி வைத்தது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா அமர்வு, புதிய தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என்று கூறியது.

ஆனால், இன்று விசாரணைக்கு எடுத்துகொண்ட தலைமை நீதிபதி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது,

ராமஜென்ம பூமி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் விசாரணை மேலும் தாமதமாகிக்கொண்டே செல்கிறது. இந்துக்கள் ராமர் கோவில் விவகாரத்தில் நம்பிக்கையுடன் பொறுமையோடு காத்திருந்து வருகின்றனர்.   இந்துக்கள் பொறுமை இழந்துவிட்டால் என்ன நடக்கும் என்று பயப்படுகிறேன் …  என்று மிரட்டும் வகையில் பேசி உள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.