வன்முறையால் பாதிக்கப்பட்ட கான்பூரில் முஸ்லீம் குடும்பத்துத் திருமண விழாவிற்கு பாதுகாப்பாக நின்ற இந்துக்கள்!

கான்பூர்: கான்பூரின் பகர்கஞ்சின் கான் குடும்பத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு திருமணம் நடந்தது. இவர்களது 25 வயது மகள் ஜீனத், பிரதாப்கரைச் சேர்ந்த ஹஸ்னைன் பாரூக்கியுடன் திருமண பந்தத்தில் இணையவிருந்தார். ஆனால் டிசம்பர் 21 ஆம் தேதி காலையில், மணமகன் தனது மாப்பிள்ளை ஊர்வலத்தை ஊரடங்கு உத்தரவு பாதிக்கப்பட்ட பகுதிக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியவில்லை என்று கூறினார்.

நகரில் வன்முறையும் பீதியும் ஏற்பட்டிருந்தது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், போலிசார் மற்றம் துணை ராணுவத்தினரால் அப்பகுதி நிறைந்திருந்தது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் அங்கு வர இயலாது என தொலைபேசி மூலம் தகவல் வந்ததும், ஜீனத் குடும்பத்தார் மிகவும் கலங்கி விட்டிருந்தனர்.  திருமண விழாவை நிறுத்துவது குறித்து யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட, ஜீனத்தின் அண்டை வீட்டாரான விமல் சபாடியா அக்குடும்பத்திற்கு உதவ முன்வந்தார். அவர் தனது நண்பர்களான சோம்நாத் திவாரி மற்றும் நீரஜ் திவாரி ஆகியோருடன் சேர்ந்து மணமகனை சந்தித்துப் பேசி தைரியம் கூறி அவரைப் பாதுகாப்பாக மணப்பெண் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறினர்.

அதேபோல், மாலையில் சபாடியா தலைமையில் 50 ஒற்றைப்படை இந்துக்கள் மாப்பிள்ளை வீட்டாரைச் சுற்றி ஒரு மனித சங்கிலியை அமைத்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் நின்று விடாமல் திருமணம் முடிந்து மணமகள் விடைபெறும் வரை அவர்கள் கூட இருந்தனர் என்று TOI இடம்  ஜீனத்தின் உறவினர் கூறினார்.  மறுநாள் தனது குடும்பத்தினரை சந்திக்க வந்த ஜீனத், தன் வீட்டை அடைந்ததும் “விமல் பய்யா“வைத் தேடிச் சென்று அவருக்கு நன்றி கூறி அவரின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

“என் திருமணத்திற்கு முந்தைய நாட்களில் எனக்கு தூக்கம் வரவில்லை” என்று ஜீனத் கூறினார் விமல் பய்யாவின் தலையீடு இல்லாவிட்டால், என் திருமணம் நடந்திருக்காது. அவர் என் வாழ்க்கையில் வந்த ஒரு தேவதை “, என்று நெகிழ்ச்சியாகக் கூறினார், ஜீனத்.

ஒரு தனியார் பள்ளியில் நிர்வாகியாக பணிபுரியும் சபாடியா, தான் சரியானது என்று உணர்ந்ததை தான் செய்தேன் என்று கூறினார். “ஜீனத் வளர்வதை நான் கண்டிருக்கிறேன். அவள் என் தங்கை போன்றவள். அவளுடைய இதயத்தை உடைக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? நாங்கள் அண்டை வீட்டுக்காரர்கள்,  அவர்களது துன்ப காலங்களில் நான் குடும்பத்துடன் நிற்க வேண்டும்”, என்றார்.