கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு இந்துக்கள் ஒன்று சேர வேண்டும்…..ஆர்எஸ்எஸ் மோகன் பகத்
சிகாகோ:
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்று சேர்ந்தால் சாதிக்க முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் தெரிவித்துள்ளார்.

1893ம் ஆண்டு அமெரிக்கா சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இதன் 125 ஆண்டு விழாவை முன்னிட்டு உலக இந்து காங்கிரஸ் அமைப்பின் மாநாடு சிகாகோவில் நடந்தது. 2,500 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘ உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். ஒரு சமுதாயமாக ஒற்றுமையாக உழைக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தள்ளி வைக்க வேண்டும். இந்து சமுதாயம் சும்மா இருக்கக் கூடாது. இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை. முன்னேற வேண்டுமானால், ஒத்துழைப்பையும், நாம் ஒன்று என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
தனியாக இருந்தால் நாய்கள் கூட சிங்கத்தை அழித்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது. நமது நெறிமுறைகள் உலகுக்கே பொருந்துபவை. சிறந்த மனிதர்கள் இந்து மதத்தில் உருவாகியுள்ளனர். அவர்களும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். கொள்கைகள் இருப்பதில் என்ன தவறு. இந்து மதம் நவீனத்துக்கு எதிரானது அல்ல. ஒட்டுமொத்த உலகையே ஒரே அணியாக கொண்டு வர வேண்டுமானால் அகந்தை இல்லாமல் பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும்’’ என்றார்.