சைவ நவராத்திரியில் அசைவ உணவு விளம்பரம் : எதிர்க்கும் இந்துத்வா

கொல்கத்தா

வராத்திரி விரதத்தின் இடையில் அசைவ உணவு சாப்பிடுவது போல் வந்துள்ள ஃபார்சூன் ஆயில் விளம்பரத்துக்கு இந்துத்வா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது நவராத்திரி நடந்து வருகிறது. இந்த ஒன்பது நாட்களும் அம்பாள் பூஜைகள் நடப்பது வழக்கம். வட இந்தியாவின் முக்கிய பண்டிகளில் ஒன்றான இந்த நவராத்திரி துர்கா பூஜா என அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் வட இந்தியர்கள் விரதம் இருப்பார்கள். ஆகவே அவர்கள் அசைவ உணவை சாப்பிடுவது இல்லை.
இந்த நவராத்திரி துர்கா பூஜையின் அடிப்படையில் ஃபார்சூன் எண்ணெய் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் நடிகை சவன் தத்தா ஒரு வங்கப் பெண்ணாக வருகிறார். அவர் “ வீடுகளில் பசி என்னும் ராட்சசர்கள் நிரம்பி உள்ளதால் பெண்கள் மிகவும் பதட்டத்துடன் உள்ளனர்” என வங்க மொழியில் பாடுகிறார்.   அப்போது ஒரு ஆண், “எனது பசி கண்ணுக்கு தெரியாது. போர் தொடங்கட்டும்” என பதில் அளிக்கிறார்.

அந்தப் பெண் ஃபார்ச்சூன் எண்ணெயைக் கொண்டு பல சைவ மற்றும் அசைவ உணவுகளை தயாரித்து கணவர் முன் வைக்கிறார். கணவர் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடித்ததும், “வயிற்றுக்கு முதலில் வழிபாடு செய்வோம். தேவையானதை சாப்பிடுவோம்”என கூறுகிறார்.

இந்த விளம்பரத்துக்கு இந்துத்வா அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர், “நவராத்திரி நேரத்தில் துர்க்கை அம்மனை பூஜை செய்வதால் அசைவ உணவு தடை செய்யப்பட்டதாகு, ஆனால் இந்த விளம்பரத்தில் விரதமிருக்கும் கணவனுக்கு நவமி தினத்தன்று மாமிசம் மற்றும் மீன்களை ஃபார்ச்சூன் எண்ணெயில் சமைத்து தருகிறார்.

உணவின் சுவையைக் கண்டு கணவர் விரதத்தை முறித்துக் கொள்கிறார். இது இந்துக்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும்” என தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு தனது சமூக வலைதள பக்கத்தில் இனி ஃபார்ச்சூன் எண்ணெயை புறக்கணிக்க வேண்டும் என ஹேஷ்டாக் இட்டு பதிவை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஃபார்ச்சூன் எண்ணெயை தயாரிக்கும் ஃபார்ச்சுன் ஃபுட் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளது. ஆயினும் அது வங்காளிகள் அதிருப்தியை கிளப்பி உள்ளது. உண்மையான துர்கா பூஜை இது தான் என்பது போல விளம்பரம் அளித்து விட்டு மன்னிப்பு கேட்பது முறையல்ல என பலரும் கூறி உள்ளனர்.