வாஷிங்டன்

ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியின் நிகழ்வில் பங்கேற்கும் அமெரிக்க அதிபர் தாம் என்ன அறிவிக்க உள்ளோம் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா சபையின் 74 ஆம் ஆண்டு கூட்டம் வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.    அதில் பங்கு பெற அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொள்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு ஹவ்டி மோடி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.  இந்த தகவலை ஏற்கனவே வெள்ளை மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது.    சுமார் 1 லட்சம் பேர் பங்கு கொள்ளும் இந்தக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது  அமெரிக்க வாழ்  இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.   இந்தியர்கள் நடத்தும் விழா ஒன்றில் ஒரே மேடையில் மோடியும் டிரம்பும் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

செய்தியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கூட்டத்தில் ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா எனக் கேள்வி எழுப்பினார்கள்.  அதற்கு  டிரம்ப், “இருக்கலாம்.  எனக்கு மோடியுடன் மிக நல்ல உறவு உள்ளது.” எனக் கூறினார்.  அது குறித்து மேலும் விவரிக்க டிரம்ப் மறுத்துள்ளார்.   அதிகாரிகள் தரப்பில் இந்த கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம்  இந்தக் கூட்டத்தில் உருவாக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.