பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம், இக்கட்டான சூழலிலும், மன தைரியத்துடன் விளையாடி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் மீண்டும் டெஸ்ட் தொடர‍ை வென்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி நாளில் 324 ரன்கள் தேவைப்பட்டது. 10 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ரோகித் ஷர்மா ஏமாற்றிய நிலையில், மற்றொரு துவக்க வீரர் ஷப்மன் கில் 91 ரன்கள் அடித்து வெற்றிக்கான அடித்தளத்தை இட்டார்.

சீனியர் வீரர் புஜாரா, வெற்றிக்கான பங்களிப்பாக 56 ரன்களை அடித்தார். ரஹானே 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஷப் பன்ட் போட்டியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிரட்டலை ஊதித்தள்ளிய இவர், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை விளாசினார். இதில் 1 சிக்ஸர் & 9 பவுண்டரிகள் அடக்கம்.

முக்கியமான கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 1 சிக்ஸர் & 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களை அடித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். மயங்க் அகர்வால் மற்றும் ஷர்துல் தாகுர் விரைவில் ஆட்டமிழந்தாலும் ரிஷப் பன்ட் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை ஈட்டிக் கொடுத்தார்.

இந்திய அணி 97 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களை எடுத்து வென்றது.

இன்றைய போட்டியின் கதாநாயகன்களாக, இளம் வீரர்கள் ஷப்மன் கில்லும் ரிஷப் பன்ட்டும் பரிண‍மித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 2 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 1 விக்‍கெட்டையும் கைப்பற்றினர்.