அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய நிவாரண நிதியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்…

வாஷிங்டன்

     கொரோனாத் தொற்றால் அமெரிக்கர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் 14,97,52,00,00,00,000 எனும் மாபெரும் தொகையை நிவாரண நிதியாக அறிவித்து கையெழுத்திட்டுள்ளார்.

    இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குப் பிறகு அமெரிக்கா கொரோனாவால் மிக நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதோடு, வேலையின்மையும் பெரும் சவாலாகத் திகழ்கிறது.

     இந்நிலையில் நாட்டு மக்கள் நலனுக்காக அதிபர் டிரம்ப், 2 டிரில்லியன் டாலர்கள் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் 14,97,52,00,00,00,000 தொகை ஆகும்.

     இதில் குழந்தை ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக 500 டாலர்களும், 75000 டாலருக்கு குறைவான ஊதியம் பெறுவோருக்கு 1200 டாலர்களும் வழங்கப்படும். மேலும் உடனடியாக நிதி தேவைப்படும் குடும்பங்கள்,  பணியாளர்கள் மற்றும் தொழில்களுக்கும் நிவாரணத் தொகை கொடுக்கப்படும்.

      தனியார் தொழிற்சாலைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய உத்தரவிடும் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் மக்களுக்குத் தேவையான வென்டிலேட்டர்களை தயாரிக்க உள்ளது.

      கட்சி வேறுபாடுகளைக் கடந்து, ஓரணியில் நின்று இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துக் கொண்டார்…