Random image

10 வருடமாக நடைபெற்ற 2ஜி வழக்கின் வரலாறு…. ஒரு பார்வை

 

சுமார் 10 வருடங்களாக நடைப்பெற்ற 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இன்றைய  தீர்ப்பு எப்படி இருக்கும்?  இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா, அவருக்கு துணையாக இருந்த கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்படுவார்களா?  யார்  யார் உள்ளே போகப்போகிறார்கள்… ? யார் வெளியே வருவார்கள்? என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.

பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்குக்கு அச்சாரம் போட்டது பாஜக மூத்த தலைவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்பிரமணியசாமி

இந்த நிலையில் 10 வருடமாக இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2007 மே மாதம் தி.மு.கழகத்தை சேர்ந்த ஆ.ராசா மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

2007 ஆகஸ்ட் மாதம் 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டு,   2007 அக்டோபர் 1–ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

2007 அக்டோபர் 1–ம் தேதி 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அலைக்கற்றை நெறிமுறைகளை சுட்டிக்காட்டி, ராசாவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்பினார்.

முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 2007 செப்டம்பர் 25–ம் தேதி வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகம் அறிவித்தது.

இதன் படி, அன்றைய தேதியில் வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலினை செய்யப்பட்டன.

2008–ம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை, ஸ்வான் டெலிகாம், யுனிடெக் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், பங்குகள் அதிக விலைக்கு விற்பனையானது.

இதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 உரிமங்களில் மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் தொலை தொடர்புத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, 2009–ம் ஆண்டு நவம்பர் 15–ம் தேதி, மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், அப்போதைய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

விரிவான அறிக்கை, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அனுப்பப்பட்டது.

2009 மே.4–ல் மத்திய கண்காணிப்பு கமிஷனிடம் என்.ஜி.ஓ. அலைக்கற்றை முறைகேடு பற்றி புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு, கண்காணிப்பு கமிஷன் பரிந்துரைத்தது.

2009–ம் ஆண்டு அக்டோபர் 21–ல் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அந்த எப்.ஐ.ஆரில், குற்றவாளிகளாக “யார் என்று தெரியாத தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் யாரென்று தெரியாத தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள்” என்று குறிப்பிடப்பட்டது.

இதன் பின், 2009 அக்டோபர் 22–ல் தொலைதொடர்பு துறை அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனையை நடத்தியது.

2009 நவம்பர் 20–ல் இடைத்தரகர் நீரா ராடியாவும், ராசாவும் தொடர்பில் இருந்தது அம்பலமானது. இதற்கு சாட்சியாக கார்பபரேட் ஏஜண்டரான நீரா ராடியாவுடன் ராஜா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது.

2010 நவம்பர் 10–ம் தேதி, ஆடிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் அரசின் கருவூலத்துக்கு வர வேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டது.

செப்டம்பர் 2010ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 70ஆயிரம் கோடி ஊழல் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நவம்பர் 2010ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76  கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கைக்குழு அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

அதைத்தொடர்ந்து 2010 நவம்பர் 14 தொலைதொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜினாமா செய்தார்.

கபில் சிபலுக்கு அந்த பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.

டிசம்பர் 2010ல் ராஜா நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அடிங்கிய ஆவனங்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 2011ல் தொலைதொடர்பு செயலாளராக இருந்த சித்தார்த்தா, ராஜாவின் உதவியாளர் சண்டோலியா கைது செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து 2011 பிப்ரவரி 10–ம் தேதி பல்வாவுடன் சேர்த்து ராசாவும் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

2011 பிப்ரவரி 17–ம் தேதி டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலின் கீழ் ராசா அடைக்கப்பட்டார்.

2–ஜி முறைகேட்டில் கிடைத்த ஊழல் பணத்தில், திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி போய்ச்சேர, பல்வா உதவியதாக சி.பி.ஐ. தரப்பில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வாதம் வைக்கப்பட்டது.

2011 ஏப்ரல் 2-ம் தேதி, 2-ஜி வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ராஜா, சாண்டோலியா, ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் பலர் இதில் சேர்க்கப்பட்டனர். ரிலையன்ஸ் நிறுவனம், ஸ்வான் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் ஆகிய நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.

2011 ஏப்ரல் 25–ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்த 2–வது குற்றப்பத்திரிகையில், கனிமொழி மற்றும் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவியின் எம்.டி. ஷரத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், 2011 மே.16–ம் தேதி, ராசாவின் உதவியாளர் சாதிக் பாஷா மர்மமான முறையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2011 மே.21–ம் தேதி கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

2011 நவம்பரில் கனிமொழிக்கு டில்லி ஐகோர்ட்டு ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில், 2011 டிசம்பர் 12–ம் தேதி சி.பி.ஐ. தனது 3–வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த குற்றப்பத்திரிகையில், மேலும் சில தனியார் நிறுவன நிர்வாகிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

2012 பிப்ரவரி 2–ம் தேதி, ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.

2012 ஆகஸ்ட்.24–ல், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க கோரிய சுப்பிரமணியசாமி  மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2013 அக்டோபர் 29: அரசு அமைத்த பி.சி.சாக்கோ தலைமை யிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2–ஜி ஊழல் குறித்து விசாரணை நடத்தியது.

2014 மே மாதம் 2ஜி விவகாரத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடனே தான் செயல்பட்டதாக ராஜா தெரிவித்தார்.

2015 ஜூன் மாதம், 2ஜி ஊழல் காரணமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி முறைகேடாக சென்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

2015 ஆகஸ்டில் ஆ.ராஜா மீது சிபிஐ சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது.

2015 நவம்பரில் தன்மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் கனிமொழி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில், 2017 ஜூலை 5–ம் தேதி, நீதிபதி ஓ.பி.சைனி, “இந்த வழக்கு தொடர்பான சந்தேகங்களையும், திருத்தங்களையும் தாக்கல் செய்யலாம்” என்று அறிவித்தார்.

2017 செப்டம்பர் 20–ல், “மேலும் ஏதேனும் விளக்கங்கள் இருந்தால் எழுத்து வடிவில் தாக்கல் செய்யலாம்” என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

இதன் பின் நீதிபதி ஷைனி தனது நீதிமன்ற விசாரணைகள் அனைத்தையும், முறைப்படி நடத்தி முடித்து தீர்ப்பு தேதி பின்னர் அறிவிப்பதாக கூறினார்.

இதன் பின் இந்த வழக்கில் செப். 30–ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலில்  அறிவித்தார்.

ஆனால்,  இந்த வழக்கில் மேலும் முக்கிய ஆவனங்கள் சேர்க்க வேண்டியதிருப்பதால், தீர்ப்பு வெளியாகும் தேதி குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்) 5ந்தேதி அறிவிக்கப்படும் என்றும், தீர்ப்பு தயாராக 3 வார கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறி இருந்தார்.

அதைத்தொடர்ந்து டிசம்பர் 5ந்தேதி 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி இன்று (டிசம்பர் 21, 2017) தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

வழக்கை தொடர்ந்த சுப்பிரமணியசாமி

அதன்படி இன்று காலை சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி ( 21ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த தீர்ப்பை நாடு முழுவதும் பொதுமக்கள் உள்பட திமுகவினரும் பெரிதும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தீர்ப்பு எப்படி இருக்கும்…..? உங்களோடு நாங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்….