அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு 

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் செம்பகஸ்ஸேரி பூராடம் திருநாள் தேவநாராயணன் தம்புரானால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள விக்ரகம் பார்த்தசாரதி பெருமாள் போல் வலது கையில் சாட்டையும் இடது கையில் சங்குடன் உள்ளதாகும்.  இங்கு பெருமாள் இவ்வாறு  தரிசனம் தருவார்.

கடந்த  1789ம் ஆண்டு திப்பு சுல்தான் படையெடுப்பின் போது இந்த விக்ரகம் அம்பலப்புழா கோயிலில் பாதுகாக்கப் பட்டது. இவருக்கு பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப் படுகிறது. பாயசத்தை ஏற்றுக்கொள்ள குருவாயூரப்பனே தினமும் வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணர் ஒரு முறை அரச சபைக்கு ஒரு ரிஷி வேடத்தில் வந்து தன்னோடு சதுரங்கம் ஆட சவால் விட்டாராம். மன்னருக்குச் சதுரங்கம் ஆடத் தெரியுமாதலால் அவரே ரிஷியுடன் ஆடினாராம். பந்தயமாக அரிசியைக் கேட்டாராம். முதல் கட்டத்தில் ஒரு அரிசி,இரண்டாவதில் இரண்டு அரிசி,மூன்றாவது கட்டத்தில் நான்கு,நான்காவதில் எட்டு,ஐந்தாவதில் பதினாறு இப்படி அரசர் கொடுக்க வேண்டியது எனப் பந்தயம்.

அரசர் தோல்வியடைந்ததால் எவ்வளவு அரிசி ரிஷிக்குப் பரிசாகக் கொடுப்பது எனக் கணக்கு பார்த்த போதுதான் ரிஷியின் உண்மையான தேவை புரிந்தது. சதுரங்கத்தின் 64 கட்டத்தையும் நிரப்ப 9,223,372,036,854,775,809 அரிசிகள் தேவைப்பட்டது.

ரிஷி அரசனைப் பார்த்து பரிதாபப் பட்டு ஒரேடியாக அரிசி தருவதற்கு பதில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால்பாயஸம் கொடுத்து கடனை தீர்க்க கூறினார்.  இதுவே பால் பாயச நைவேத்திய வரலாறு..