சமீபத்தில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கரதையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்துள்ளது.

positive

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி சிகிச்சைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரத்தம் குறைவாக இருந்துள்ளது. அதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அந்த பெண்ணிற்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வாங்கப்பட்டு ஏற்றப்பட்டது. ரத்தம் ஏற்றப்பட்ட ஓரிரு நாட்களிகேயே அந்த பெண்ணிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதற்கு முன்னதாக ரத்த தானம் அளித்த இளைஞர் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை அறிந்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் தான் ரத்த தானம் செய்த் ரத்த வங்கியை தொடர்பு கொண்டு தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு முன்பாகவே அந்த இளைஞரின் ரத்தம் சாத்தூரில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்டது.

இதையடுத்து, ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதியானது. கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி.பாதிப்பு உடைய ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்த நிலையில் ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ரத்த தானம் செய்யப்பட்ட இளைஞருக்கு உரிய ரத்த பரிசோதனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரத்த வங்கி ஊழியர்கள் 3பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும், அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைககு எச்.ஐ.வி. தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக்குழு ஒன்றும் அரசு சார்பில் அமைக்கப்பட்டு திவீரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் 45 நாட்களுக்கு பின்னரே பிறந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.