அமர்நாத் யாத்திரிகர்களை தாக்க மாட்டோம்.. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்!: ஹிஸ்புல் தலைவர் பேச்சு

உங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை, நீங்கள் எங்களுடைய விருந்தினர்கள் என அமர்நாத் யாத்ரீகர்களுக்கு ஹிஸ்புல் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையையொட்டி   அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய ராணுவம் செய்துள்ளது. . யாத்ரீகர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. .

 

இந்நிலையில் யாத்திரை மேற்கொள்பவர்களை விருந்தினர்களாக பார்ப்பதாக  ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம்  அறிவித்துள்ளது. மேலும், “யாத்திரிகர்களுக்கு  பாதுகாப்பு தேவையில்லை அவர்கள் எங்களுடைய விருந்தினர்கள்தான், அவர்களைத் தாக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை” என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் ரியாஸ் அகமது பேசும் ஆடியோ காட்சியை அவ்வியக்கம் வெளியிட்டுள்ளது. அதில், “யாத்திரிகர்களே.. அமர்நாத் யாத்திரையை நீங்கள் பாதுகாப்பு இல்லாமலே மேற்கொள்ளலாம். நீங்கள் எங்களுடைய விருந்தினர்கள், உங்களுக்கு பாதுகாப்பு அவசியம் தேவையில்லை.

அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி எஸ்பி வாய்த் கூறியுள்ளார். இதில் உண்மை இல்லை.

அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்த எங்களிடம் எந்த ஒரு திட்டமும் கிடையாது. யாத்திரீகர்கள் மீது நாங்கள் தாக்குதலை நடத்தவும் மாட்டோம். யாத்ரீகர்கள் உங்களுடைய மத கடமையை நிறைவேற்ற வருகிறீர்கள். நாங்கள் எப்போதும் யாத்திரையை குறிவைத்தது கிடையாது, இனியும் அதனை செய்ய மாட்டோம் எங்களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டம் எங்கள் மீது வன்முறையை பிரயோகித்தவர்கள் மற்றும் எங்களை ஆயுதம் ஏந்தவைத்தவர்களுக்கு எதிரானது மட்டும்தான்,” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எங்களுடைய போராட்டம் இந்திய மக்களுக்கு எதிரானது கிடையாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.