ஹிஜ்புல் முஜாகிதீன் தலைவர் மகன் சையது யூசுஃப் கைது

டில்லி

ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகனான சையத் சாகித் யூசுஃப் தேசிய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஹிஜ்புல் முஜாகிதீன் என்னும் தீவிரவாத அமைப்பின் தலவர் சையத் சலாகுதீன்.    கடந்த 26ஆம் தேதி சையத் சலாகுதீன் ஒரு சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய மகன் சையத் சாகித் யூசுஃப்.  இவர் ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் வேளாண்மைத்துறையில் பணி புரிபவர் ஆவார்.

யுசுஃப் மீது பயங்கரவாதத்துக்கு பண உதவி புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  குலாம் முகமது பட் என்பவர் சலாகுதீனின் உத்தரவின் படி யூசுஃபுக்கு வெளிநாட்டில் இருந்து 2011-14 வருட கால கட்டங்களில் பணம் அனுப்பியதாகவும் அந்தப் பணம் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு யூசுஃபால் வழங்கப்பட்டது எனவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக யூசுஃப் உடனடியாக தேசிய புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வந்தார்.   விசாரணை முடிந்தபின் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே குலாம் முகமது பட், முகமது சித்திக் கானையன், குலாம் ஜேலானி லுலூ, மற்றும் ஃபாரூக் அகமது தக்கா ஆகியோர் கைதாகி உள்ளனர்.  முகமது மக்பால் பண்டிட் மற்றும் அய்ஜாஜ் அகமது பட் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.