சென்னை,

மிழகம் முழுவதும் இன்று காலை முதலே அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்னும் ஒருசில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணியினர் பணம் பட்டுவாடா செய்வதை தொடர்ந்து இந்த அதிரடி ரெய்டில் வருமானவரித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகளில் இன்று காலை முதல் மத்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவேங்கைவாசல் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷர் மையத்திற்கு 3 கார்களில் வந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கிருந்த பல்வேறு கோப்புகளையும் ஆய்வு செய்தனர்.

மேலும் இலுப்பூர் அருகே உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள  அமைச்சர் விஜயபாஸ்கரனின் உதவியாளர் நைனார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2.2 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நைனார் கைதுசெய்யப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டதா அல்லது, வாக்காளர்களுக்கு கொடுக்க சொல்லி அமைச்சர் கொடுத்த பணத்தில் ஸ்வாகா செய்யப்பட்டதா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும்.

மேலும் எக்மோர்  லாட்ஜில் நடைபெற்ற சோதனையின்போது  ரூ.120 கோடி பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருந்த ஆவனங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.