மகளிர் உலக கோப்பை ஹாக்கி: உலக தரவரிசையில் பின் தங்கிய அயர்லாந்திடம் 1-0 கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்தியா
மகளிர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்திய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வீழ்த்தியது.
மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்தது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற 2வது ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்க்கொண்டது.
ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் அயர்லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணியை சேர்ந்த அனா கோல் அடித்தார். இதனால் அயர்லாந்து 1-0 என்ற நிலையில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிய இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் உலக தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இந்திய அணியை 16வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக் கொண்டது. இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்தில் 7வது இடத்தில் உள்ள அமெரிக்காவை அயர்லாந்து வெற்றிக் கொண்டது. இந்தியாவை வெற்றிக்கொண்டது மூலம் அயர்லாந்து அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
உலக தரவரிசையில் பின் தங்கியிருந்த அயர்லாந்து அணியிடம் 2வது முறையாக இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஹாக்கி லீக் அரையிறுதி போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
வரும் 29ம் தேதி இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் வெற்றிப்பெற்றால் மட்டுமே இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.