உலக கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!

உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

india

உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. இதில், இந்திய உட்பட 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா பெற்ற இந்திய அணி முதலிடன் பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கப்பட்ட 12வது நிமிடத்தில் இந்திய அணியின் ஆகாஷ்தீப் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெதர்லாந்து வீரர் பிரின்க்மேன் ஒரு கோல் அடித்து அணியை சமனிலைப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மீண்டும் கோல் அடிக்க இரு அணி வீரர்கள் முயன்றும் முடியாமல் போனது. அதன்பின்னர் 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நெதர்லாந்து அணியின் மின்க் வாண்டர் வெர்டன் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் அந்த அணி 2-1 என முன்னிலை வகித்தது. இதை தொடர்ந்து பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க முயன்றும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இறுதியாக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டு வெளியேறியது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி வெற்றிப்பெற்ற பெல்ஜியம் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி