உலக மகளிர் ஹாக்கி லீக் போட்டி!! பெனால்டி ஷூட்டில் இந்தியா அபார வெற்றி

மகளிருக்கான உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டியில் சிலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

உலக மகளிர் ஹாக்கி லீக் போட்டி கனடாவில் வான்கூவர் நகரில் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டன.

இதன் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் சிலி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீராங்கனைகளும் வெற்றிக்கான இலக்கை நோக்கி ஆடினர். ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே சிலி அணி வீராங்கனை மரியா மால்டொனடோ தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதன் மூலம் சிலி அணி முன்னிலை பெற்றது.

 

2வது பாதியில் இந்திய அணி வீராங்கனைகளின் கோல் முயற்சியை சிலி அணி வீராங்கனைகள் லாவகமாக தடுத்தனர். பின், 41 வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை ராணி ரம்பால் கடத்தி கொடுத்த பந்தை சக வீராங்கனை அனுபா பர்லா நேர்த்தியாக கோலாக மாற்றி ஆட்டத்தை சமன்படுத்தினார். முடிவு வரை இரு அணி வீராங்கனைகளின் கோல் முயற்சி கைகூடவில்லை. இறுதியில் 1-1 என ஆட்டம் சமனில் முடிவடைந்ததால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதனை திறமையாக எதிர்கொண்ட இந்திய வீராங்கனைகள் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினர். இந்த தொடரில் இந்திய வீராங்கனை சவிதா சிறந்த கோல்கீப்பருக்கான விருதை பெற்றார். இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய வீராங்கனை தீபிகா 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 2018 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு முன்னோட்டமாக கருதப்படும், உலக ஹாக்கி லீக் அரையிறுதிச் சுற்றுத் தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.