ரூ.450 கோடி செலவில் ஒகேனக்கல் 2–வது குடிநீர் திட்டம்! தர்மபுரியில் முதல்வர் அறிவிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் 2–வது குடிநீர் திட்டம் ரூ.450 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று தர்மபுரியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 1,064 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 868 நபர்கள், இறந்தவர்கள் 11 நபர்கள், அவர்களில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4 நபர்கள்.

19–ந் தேதி அன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 18 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 17 நபர்கள், தற்போது வரை சிகிச்சை பெற்று வருபவர்கள் 185 நபர்கள். 19.8.2020 வரை 37,501 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்குத் தேவையான நோய்த் தடுப்பு உபகரணங்கள் போதியளவு கையிருப்பில் உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 58 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,905 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 93,415 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு மனைப்பட்டா

தருமபுரி மாவட்டத்தில், முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டம் மூலம் பெறப்பட்ட 49,531 மனுக்களில் சுமார் 29,426 தகுதி வாய்ந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2019–-20 நிதியாண்டில் சுமார் ரூபாய் 28.24 கோடி மதிப்பீட்டிலான 7,062 இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் இந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் எண்ணேகோல் கால்வாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஹள்ளி கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டு தனியார் நில எடுப்புப் பேச்சு வார்த்தைக் குழு மூலம் நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நில எடுப்புப் பணி முடிந்தவுடன், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 9 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 41 பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அணையாலம் அணைக்கட்டிலிருந்து தூள்சட்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் திட்டத்தை நிறைவேற்ற அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரூர் வட்டம், குமாரம்பட்டி கிராமத்தில் அணைக்கட்டினை புனரமைக்கும் பணி ரூ.4.49 கோடி மதிப்பீட்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளது.

உயர்மட்டப் பாலம்

சேலம் – -திருப்பத்தூர் – -வாணியம்பாடி சாலையை ரூபாய் 297.55 கோடி மதிப்பீட்டில் இருவழித் தடத்தை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் 2019-–20–ம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 3 உயர்மட்ட பாலப் பணிகள் ரூபாய் 18.27 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020–-21–ம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 3 உயர்மட்ட பாலப் பணிகள் ரூ.10.06 கோடி மதிப்பீட்டில் கட்ட அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதேபோல, ஒன்றியச் சாலைகள் பல இடங்களில் சீர் செய்யப்பட்டிருக்கிறது. ரெயில்வே கடவு எண். 38-ல் சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கிடையே ரூபாய் 13.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிக்கப்பட்டு தற்போது ரெயில்வே துறை பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தருமபுரி வெண்ணாம்பட்டி சாலை கடவு எண்.41 சிவாடி மற்றும் தருமபுரி ரெயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரூபாய் 11.90 கோடி மதிப்பீட்டில் நில எடுப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இது முடிந்தவுடன், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி துவங்கப்படும். ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் பகுதி-–2 திட்டத்திற்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ரூ.450 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது. அனுமதி கிடைத்தவுடன் அந்தப் பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 108 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 1,51,620 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூ. 2,126 கோடி கடனுதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2020–-21ஆம் ஆண்டிற்கு ரூபாய் 988 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 71,010 பயனாளிகளுக்கு ரூ. 261.60 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 4,111 மகளிருக்கு ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் இருசக்கர வாகனம் வழங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நான்காண்டுகளில், நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 255 கோடியே 21 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 58 ஆயிரத்து 896 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்தத் திட்டத்திற்காக 2020–-2021–ல் 95 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி அருகில் கோழிமேக்கனூரில் 168 வீடுகள் 14.82 கோடி மதிப்பீட்டிலும், அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி ஆகிய பகுதிகளில் 3,748 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ரூ. 367 கோடிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதேபோல, சொந்த இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில் தருமபுரி நகராட்சி வார்டு 1 முதல் 33 வரை 4,567 பயனாளிகளுக்கு சுமார் ரூ.96 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பை நல்லூர், கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பாரப்பட்டி, அரூர் பேரூராட்சிப் பகுதிகளில் 555 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.11.65 கோடி மதிப்பிலான வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயர்கல்வி

தருமபுரி மாவட்டத்தில், 2011-–ம் ஆண்டு முதல் இன்று வரை 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு சட்டக் கல்லூரியும் அம்மாவின் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிக்கு ரூபாய் 62 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரியும், 2 பாலிடெக்னிக் கல்லூரியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம், தருமபுரி மாவட்டத்தில் ரூபாய் 911 கோடி முதலீட்டில் எச்.பி.சி.எல். நிறுவனம் பெட்ரோலிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் முனையம் அமைக்கும் திட்டத்திற்காக சிவாடி கிராமத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அந்நிறுவனத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுக்குச் சொந்தமான நிலம் சுமார் 925.33 ஏக்கர் முதற்கட்டமாக எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. மொத்தமாக 1,733 ஏக்கர் நிலம் தேவை. ரூபாய் 2 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறது. இதன்மூலம் 2 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.