கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதாவால் அதன் ஸ்டைலில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையை அடிப்படையாக வைத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் குறைபாடுகளை அலசுகிறார்கள் கட்டுரையாளர்கள் ஸ்ரீதர் ஆச்சார்யலு மற்றும் விகாஸ் பன்ஸோட். இதோ அவர்களின் கருத்துகள்:

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் கட்சி மாறுவதற்கு ஆசை காட்டப்பட்டார்கள்; பிறகே ராஜினாமா செய்ய தூண்டப்பட்டார்கள். அவர்கள் ராஜினாமா செய்த நேரத்தில், அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்ற மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா நாடகம் என்பது அரசை கவிழ்க்கும்பொருட்டு நடத்தப்பட்ட ஒன்றே ஒழிய, அதில் வேறு நியாயமான காரணம் எதுவுமில்லை. தூண்டப்பட்ட ராஜினாமாவை இயல்பானது என்று ஏற்க முடியாது.

கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் எவ்வாறு ஜனநாயக மரபின்படி செயல்பட வேண்டுமென்பதை காட்டிவிட்டார். அவர் தனது 12 பக்க தீர்ப்பு அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா நியாயமான ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார்.

அந்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் விளைவு ஒன்றுதான். அவர்களின் தொகுதிகள் காலியாகியிருக்கும். ஆனால், இதில் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டால் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. மேல்சபைக்கு தேர்வுசெய்யப்பட்டு மந்திரியாகவும் முடியாது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகரின் தகுதிநீக்க முடிவால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் மட்டும் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களைவிட பாரதீய ஜனதா முதல்வர் எடியூரப்பாவிற்கு பெரிய மகிழ்ச்சி! ஏனெனில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தொடர்பாக கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி இல்லை. அவருக்கு பெரிய நிம்மதி. தனது கட்சியின் ஆட்களை மட்டுமே சரிகட்டினால் போதும்.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் ஓட்டைகள்..!

இந்தியாவில் கடந்த 1985ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்சித் தாவல் தடைச்சட்டம் பல்வேறு ஓட்டைகளைக் கொண்டுள்ளது. இதனால் சில தனிநபர்கள் மட்டுமே சிக்குகின்றனர். பெரிய குழுவாக தவறு செய்வோர் தப்பித்து விடுகின்றனர். இந்த ஓட்டைகள் ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குகின்றன.

அதாவது, ஒரு கட்சியின் தேர்வு செய்யப்பட்ட சட்ட அவைகளின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மொத்தமாக விலகி வேறு கட்சியில் இணைந்துவிட்டாலோ, அல்லது மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் விலகி அக்கட்சியை உடைத்தாலோ அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. இதுதான் பெரிய பிரச்சினையே.

இந்தக் குறைபாட்டை ஆளும் கட்சிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக சமீபகாலங்களில், மத்திய ஆளும் பாரதீய ஜனதா, எதிர்க்கட்சிகளை சிதைக்க இந்த ஓட்டையை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறது.

இந்த சட்டத்தைப் பொறுத்தவரை மற்றொரு பெரிய குறைபாடும் உண்டு. தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள், குறிப்பிட்ட சட்ட அவையின் பதவிகாலம் வரை, இடைத்தேர்லில் போட்டியிடவோ அல்லது மேல்சபையில் உறுப்பினராகவோ முடியாது என்றாலும், அவர்களால் வேறுசில லாபகரமான பதவிகளை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்பரேஷன் சேர்மன் உள்ளிட்ட பதவிகளையும், அமைச்சர் பதவிக்கு இணையான பதவிகளையும் பெற்று அவர்களால் நினைத்த நன்மைகளை அடைய முடிகிறது என்பது அந்த சட்டத்தின் மிக முக்கிய குறைபாடு.

மேலும், கட்சித்தாவல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களின் மீது முடிவெடுக்க, சபாநாயகர் மற்றும் தலைவர்களுக்கான கால அவகாசங்கள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படாமையால், இந்த அம்சமும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.