டில்லி

கொரோனா அதிகரிப்பால் டில்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் பொது வெளியில் ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் தினசரி பாதிப்பு 47 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.   இதுவரை 1.17 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.60 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 1.12 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 3.65 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.  இங்கு நேற்று வரை 25,33,026 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  தற்போது 2,30,641 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதைப் போல் தலை நகர் டில்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இங்குக் கிட்டத்தட்ட 6.5 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டு 11 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் 28 மற்றும் 29 தேதிகளில் நாடெங்கும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இந்த பண்டிகைகளின் போது மக்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் கூடி ஹோலிகா அரக்கி எரிப்பு மற்றும் அடுத்த நாள் வண்ணம் பூசிக் கொண்டாடுதல் ஆகியவற்றை நிகழ்த்துவது வழக்கமாகும்.   தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் டில்லி அரசு ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளின் போது மக்கள் பொது வெளியில் கூடி எவ்வித கொண்டாட்டத்திலும் ஈடுபடக் கூடாது என அறிவித்துள்ளது.  இதைப் போல் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறையும் மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் எந்த ஒரு இடத்திலும் ஹோலி பண்டிகையை பொது வெளியில் கொண்டாட தடை விதித்துள்ளது.